விக்கிரவாண்டி - -தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகளில் தாமதம் ஏன்: ஐகோர்ட் கேள்வி
விக்கிரவாண்டி - -தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகளில் தாமதம் ஏன்: ஐகோர்ட் கேள்வி
ADDED : மார் 14, 2024 12:52 AM
சென்னை:விக்கிரவாண்டி - -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, நெடுஞ்சாலை கள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனு விபரம்:
விக்கிரவாண்டி- - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, 2017ல் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் துவங்கின. நிலம் கையகப்படுத்துதல் போன்ற பூர்வாங்க பணிகள் முடிவடைந்து, ஒப்பந்ததாரர்களிடம் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், பின்னலுாரில் இருந்து தஞ்சாவூர் இடையே, சாலை விரிவாக்கம் பணி மந்த கதியில் நடக்கிறது.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகளின் விலைமதிப்பற்ற நேரம், விரயம் ஆகுவதோடு, பல பகுதிகள் விபத்துகள் நடக்கும் பகுதியாக மாறியுள்ளன.
எனவே, நான்கு வழிச் சாலை பணிகள் முடியும் வரை, விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். சாலை பணிகளை விரைவாக முடிப்பதோடு, புகார் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு, 'மூன்று கட்டங்களாக, பணிகள் நடந்து வருகின்றன; எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன' என, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளித்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை பணிகள் நிறைவு பெறாதது ஏன்?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளின் நிலை குறித்த அறிக்கையை, நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஏப்.,10க்கு தள்ளிவைத்தனர்.

