கிட்னி விற்பனை மோசடியில் யாருக்கு பொறுப்பு? மருத்துவமனை நழுவ முடியாது என்கிறது ஐகோர்ட்
கிட்னி விற்பனை மோசடியில் யாருக்கு பொறுப்பு? மருத்துவமனை நழுவ முடியாது என்கிறது ஐகோர்ட்
ADDED : ஆக 22, 2025 07:58 AM

மதுரை: 'சிறுநீரகம் விற்பனை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிய வேண்டும். பின் விசாரணையை துவக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ., நடத்த உத்தரவிட வேண்டும் என, கோரி இருந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜரானார்.
தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பள்ளிப்பாளையம் பகுதியில் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்பாக சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரித்தது.
சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒருவருக்கு, புரோக்கர் பணம் கொடுத்தது தெரியவந்தது. தானமாக கொடுத்தவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டது ஸ்கேன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க, திருச்சி, பெரம்பலுாரிலுள்ள இரு மருத்துவமனைகளுக்கு குழு சென்றது.
முதற்கட்ட விசாரணை அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு வழங்கிய உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு பகுதியில் சிறுநீரக தானம் செய்பவர்கள் தொடர்பான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மனித உறுப்பு மாற்று சட்டப்படி தானம் செய்பவரும், அதை பெறுபவரும் குடும்ப நண்பர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டான்லி மோகன் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கும் மாவட்ட அங்கீகார குழுக்களை மறுசீரமைத்தல் மற்றும் மாநில அங்கீகார குழுவை புதிதாக உருவாக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
நீதிபதிகள், 'மருத்துவமனையை நம்பி தான் மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மனித உறுப்புகளை திருடுவது குற்றம்' என்றனர். தனியார் மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர், 'குற்றச்சாட்டிற்கும், மருத்துவமனைக்கும் தொடர்பில்லை. உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் வழங்கும் குழு அனுமதி வழங்கினால் மட்டுமே அதற்கான சிகிச்சை நடைபெறுகிறது.
அரசியல் உள்நோக்கில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, வாதிடப்பட்டது. நீதிபதிகள், 'மருத்துவமனைக்கு தொடர்பு இல்லை என்பது ஏற்புடையதல்ல. அங்குள்ள டாக்டர்கள் தான் சிகிச்சை அளிக்கின்றனர். குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிய வேண்டும். 'பின், விசாரணையை துவக்க வேண்டும். இவ்வழக்கு ஆக., 25க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.