நான் கேட்டது வெள்ளை அறிக்கை; முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் உதயநிதி; இ.பி.எஸ்., சுளீர்
நான் கேட்டது வெள்ளை அறிக்கை; முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் உதயநிதி; இ.பி.எஸ்., சுளீர்
ADDED : அக் 17, 2024 12:45 PM

சென்னை: வெள்ளை அறிக்கை கேட்டால், முதிர்ச்சியில்லாமல் உதயநிதி பதில் அளிக்கிறார். விளையாட்டு தனமாக பேசுகிறார் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி,எஸ்., கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழியும் என இந்திய வானிலை மையம் அறிவித்தது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. சென்னையில் ரெட் அலர்ட் கொடுத்த பிறகு எந்த மழையும் காணவில்லை. வெயில் தான் பிரகாசமாக இருக்கிறது.
அரசு அலறுகிறது
குறைந்த மழை அளவு ஏற்பட்ட இந்த காலகட்டத்திலும் கூட சென்னையில் பல்வேறு இடங்கள் தண்ணீரால் தத்தளித்தது. குறிப்பாக, ராயப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் கூறினர். அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது அதிமுக அரசு. வெறும் மழைக்கே அரசு அலறுகிறது. அ.தி.மு.க., பல புயல்களை கண்டது. அ.தி.மு.க.,வை குறை சொல்ல யாருக்கும் தகுதி கிடையாது. தூய்மை பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுத்தால் போதுமா? அவர்களது குறைகளை சரி செய்தீர்களா?
பயன்படுத்தாதீர்!
அதிமுக பிரிந்து கிடக்கின்றது, என்ற வார்த்தையே இனிமேல் பயன்படுத்தாதீர்கள்; நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான். கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் நீக்கப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட வடிகால் பணிகளை முடிக்காததால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு வேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியே சென்றிருக்க முடியாது.
சென்னையில் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
அரசின் கடமை
வெள்ளை அறிக்கை கேட்டால், முதிர்ச்சியில்லாமல் உதயநிதி பதில் அளிக்கிறார். விளையாட்டு தனமாக பேசுகிறார். மழை நீர் தேங்கவில்லை. இதுதான் வெள்ளை அறிக்கை என துணை முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சி வெள்ளை அறிக்கை கேட்டால் அதை தருவது அரசின் கடமை; தட்டிக்கழிக்கக்கூடாது. பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

