''வெத்தலை பாக்கு மாத்தியாச்சு; தேதிதான் குறிக்கணும்'': ராஜ்யசபா 'சீட்' பற்றி பிரேமலதா பதில்
''வெத்தலை பாக்கு மாத்தியாச்சு; தேதிதான் குறிக்கணும்'': ராஜ்யசபா 'சீட்' பற்றி பிரேமலதா பதில்
UPDATED : மார் 21, 2024 06:15 PM
ADDED : மார் 21, 2024 04:22 PM

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக.,வுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது தொடர்பான கேள்விக்கு, ''வெத்தலை பாக்கு மாத்தியாச்சு, தேதிதான் குறிக்கணும்'' என பதிலளித்தார் பிரேமலதா.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சி லோக்சபா தேர்தலை முதன்முறையாக சந்திக்க இருக்கிறது. எந்த கூட்டணியில் இணைவது என மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தியும் முடிவெடுக்காமல் தாமதித்து வந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா. பிறகு, ராஜ்யசபா 'சீட்' கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி என அறிவித்து விடாபிடியாக இருந்தார். இதனால் அவரை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக.,வும் பா.ஜ.,வும் யோசித்து வந்தன.
அதற்குள் பாமக.,வை கூட்டணிக்குள் தன்வசப்படுத்தியது பா.ஜ. இதனால் வேறு வழியின்றி தேமுதிக.,வை கூட்டணிக்குள் இழுத்தது அதிமுக. மத்திய சென்னை, விருதுநகர், தஞ்சாவூர், கடலூர், திருவள்ளூர் என 5 தொகுதிகள் தேமுதிக.,விற்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், பிரேமலதா 'டிமாண்ட்' செய்த ராஜ்யசபா சீட் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''வெத்தலை பாக்கு மாத்தியாச்சு; தேதிதான் குறிக்கணும். ராஜ்யசபா சீட் உறுதி; வெகு விரைவில் அறிவிப்போம், பொறுமையாக இருங்கள்'' என பிரேமலதா பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ''வரும் மார்ச் 24ம் தேதி திருச்சியில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளோம். 40 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை துவங்குகிறோம்'' என்றார்.

