UPDATED : ஏப் 19, 2024 05:18 PM
ADDED : ஏப் 19, 2024 03:35 PM

கவுண்டம்பாளையம்: கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ஆயிரம் ஓட்டுகள் காணவில்லை எனக்கூறி பா.ஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அங்கப்பா மற்றும் ராமசாமி தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட பூத்துகளில் சுமார், 1000 ஓட்டுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தன. இதனால் இன்று காலை ஓட்டு போட வந்த திரளான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பா.ஜ., அமைப்பாளர் ப்ரீத்தி லட்சுமி கூறுகையில்,' இங்கு பாஜ.,வுக்கு விழும் ஓட்டுகள் என முன்னரே அறிந்து, அதை நீக்கி உள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் மனு செய்ய உள்ளோம். இவ்விரண்டு பூத்துகளிலும் தவறான தகவலின் அடிப்படையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, இங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரி உள்ளோம்' என்றார்.
இச்சம்பவத்தை அடுத்து பாஜாவினர் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அருகே கேத்தி பாலாடா தொட்டண்ணி கிராமத்தில் வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி ஓட்டுக்கள் மறுக்கப்பட்டது.
ஓட்டு வழங்கவிட்டால் ஓட்டுப்பதிவு நிறுத்தி வேறு தேறிக்கு மாற்றி தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த தாசில்தார் கனி சுந்தரம் மற்றும் அதிகாரிகளை, பா.ஜ., கட்சியினர், பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் போனது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அனைவருக்கும் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யாவிட்டால் போராட்டமும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதேபோல் தங்காடு ஒருநிலைப் பகுதியிலும் 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு பெயர் பட்டியலில் இல்லை எனக் கூறியதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திமுக.,வினருடன் வாக்குவாதம்
கோவை பிஎன் புதூர் திமுக பகுதி செயலாளர் பாக்யராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கே வந்த போலீசார், 'கூட்டம் கூட கூடாது, கட்சி சின்னங்களை வைத்திருக்க கூடாது' எனக் கூறியுள்ளனர். உடனே அவர்கள் கட்சி சின்னத்தை அங்கிருந்து அகற்றி வைத்து பூத் ஸ்லீப்பை மட்டும் வழங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் வந்த உதவி கமிஷனர் நவீன் குமார் அங்கு யாரும் இருக்கக்கூடாது பந்தலை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் உதவி கமிஷனர், பகுதி செயலாளர் பாக்யராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

