UPDATED : ஜூலை 10, 2024 11:38 PM
ADDED : ஜூலை 10, 2024 11:34 PM

சென்னை : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து, மாலையில் முடியும் வரை, ஆச்சரியமூட்டும் வகையில், 'மளமள'வென ஓட்டுகள் பதிவாகின. இத்தேர்தலில் வெல்லப்போவது பணமா அல்லது வாக்காளர்களின் மனநிலையா என்பது, நாளை மறுதினம் நடக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் தெரியவரும்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்தது. தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட, 29 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.
அ.தி.மு.க., தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், ஆளுங்கட்சியான தி.மு.க., தீவிரமாக களப்பணியாற்றியது; வாக்காளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர்.
அதேபோல், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், கூட்டணி கட்சிகள் துணையுடன், சமுதாய ஓட்டுகளை கவர்ந்து வெற்றி பெற, பா.ம.க.,வும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இதனால், வழக்கமான இடைத்தேர்தல் கவனிப்புகள், வாக்காளர்களை உற்சாகமடைய வைத்தன.
இது, நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் பெரிய அளவில் எதிரொலித்தது.
தொகுதியில், ஒரு லட்சத்து 16,962 ஆண்கள்; ஒரு லட்சத்து 20,040 பெண்கள்; 29 திருநங்கையர்
என, மொத்தம் 2 லட்சத்து 37,031 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று காலை 7:00 மணிக்கு, 276 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு துவங்கியது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தனர். விக்கிரவாண்டி, காணை, சூரப்பட்டு, சிறுவாலை, கெடார், நேமூர், திருவாமாத்துார் உட்பட பல ஓட்டுச்சாவடிகளில், காலையிலே அதிக அளவில் பெண்கள் ஓட்டு போட குவிந்தனர்.
ஓட்டுப்பதிவு நாளான நேற்றும், காணை வட்டாரத்தில், பல கிராமங்களில், ஆளும் கட்சி தரப்பில் ஓட்டுக்கு 500 ரூபாய் வழங்கியதாக புகார்கள் எழுந்தன. மதியம், வாக்காளர்களை கட்சியினர் வீடு தேடிச் சென்று, ஓட்டுப் போட அழைத்து வந்தனர்.
ஒரு சில இடங்களில், ஆளும் கட்சியினருக்கும், பா.ம.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் வழங்குவதாகவும், புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் பா.ம.க.,வினர் புகார் தெரிவித்தனர்.
காலை 9:00 மணிக்கு 12.94; 11:00 மணிக்கு 29.97; பகல் 1:00 மணிக்கு 50.95; மாலை 3:00 மணிக்கு 64.44; மாலை 5:00 மணிக்கு, 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில், ஓட்டுச்சாவடிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக, சில ஓட்டுச்சாவடிகளில் மாலை 6:00 மணிக்கு மேலும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இத்தொகுதியில், 2011 தேர்தலில் 81.39; 2016 தேர்தலில் 81.71; 2019 தேர்தலில் 84.35; 2021 தேர்தலில் 82.04 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலிலும், 80 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளன. சிறு சலசலப்புகள் தவிர்த்து, அமைதியாக ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.
ஓட்டு எண்ணிக்கை, 13ம் தேதி நடக்க உள்ளது. இடைத்தேர்தலில் வெல்லப்போவது பணமா அல்லது வாக்காளர்களின் மனநிலையா என்பது, நாளை மறுநாள் நடக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் தெரியவரும்.

