வெற்றி கொள்கை திருவிழா: விக்கிரவாண்டியில் கரைபுரண்ட உற்சாகம்!
வெற்றி கொள்கை திருவிழா: விக்கிரவாண்டியில் கரைபுரண்ட உற்சாகம்!
ADDED : அக் 27, 2024 04:59 PM

சென்னை: தமிழக வெற்றிக் கழக மேடையில் வெற்றி கொள்கைத் திருவிழா என்ற பெயர் இடம்பெற்றதை கண்டு தொண்டர்கள் பூரிப்படைந்தனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ள பிரபல நடிகர் விஜய்க்கு இன்று முக்கியமான நாள். அவருக்கு மட்டுமல்ல, அவரின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், ரசிகர்களுக்கும் இன்றைய தினம் தான் தீபாவளி.
தமிழக வெற்றிக்கழகம் என்ற தமது கட்சி பெயர் அறிவிப்பு, கொடி அறிமுகம், கட்சி பாடல் என்ற சரியான திட்டமிடல் என அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் கட்சியின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சாலையில் நடைபெற்றது. மாநாடு இன்று தான் என்றாலும் நேற்று முதலே வி. சாலையை நோக்கி தொண்டர்கள் நகரத் தொடங்கினர்.
மாநாட்டு பகுதியில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கானோர் குவிந்து எங்கும் மனித தலைகளாக காட்சியளிக்க, மேடையிலும் ஒரு புதிய பொருளை நடிகர் விஜய் கொண்டு வந்திருந்தார் என்கின்றனர். அது மேடையின் பெயரான வெற்றிக் கொள்கைத் திருவிழா என்பதுதான் ஹைலைட்.
தமிழக வெற்றிக்கழகம், வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற இரண்டு பெயர்களை பற்றி தான் ரசிகர்கள் பேச்சாக இருக்கிறது. இந்த பெயர்களிலும் இருக்கும் வெற்றி என்ற பெயர் மீது நடிகர் விஜய் வைத்துள்ள அசாத்திய நம்பிக்கை என்கின்றனர்.
இது குறித்து த.வெ.க., தொண்டர்கள் கூறி உள்ளதாவது: தமது பெயர் விஜய். இதன் தமிழ் பெயர் தான் வெற்றி. அதனாலேயே தான் தமது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்தார்.
இன்னும் சொல்லப் போனால் அவர் நடித்த முதல் படத்தின் பெயர் வெற்றி (இந்த படத்தில் தான் அரிதாரத்தை பூசினார் விஜய். 1984ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தான் அவர் குழந்தை நட்சத்திரமாக விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்).
தமது பெயர் விஜய் (அதாவது தமிழில் வெற்றி), தாம் முதலில் சினிமாவில் கதாபாத்திரமாக காலடி வைத்த படம் வெற்றி, தமது கட்சி பெயர் தமிழக வெற்றிக்கழகம். இந்த மூன்றிலும் வெற்றி என்ற பெயர் நேரிடையாகவும், மறைபொருளாகவும் உள்ளது.
இதுபோதாது என்று மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி சாலையில் நடந்துள்ளது. இதிலும் ஆங்கில எழுத்தான V என்ற எழுத்து தான் முதலில் வருகிறது.
எனவே அரசியல் பயணத்தில் இன்று முதல் எங்களுக்கு வெற்றி தான் என்று உற்சாகத்தில் கரைபுரண்டு பூரிக்கின்றனர் அவரது தொண்டர்கள்.

