விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி வழங்க பட்டியல் தயாரிப்பு
விளையாட்டுகளில் சாதித்த 100 வீரர்கள்: அரசு பணி வழங்க பட்டியல் தயாரிப்பு
ADDED : அக் 24, 2024 07:02 AM

சென்னை: விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த, 100 வீரர்களுக்கு அரசு பணி வழங்க, மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
தமிழக அரசு மற்றும் அதன் பொதுத் துறை நிறுவனங்களில், விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நீச்சல், வாள் சண்டை, படகோட்டுதல், தடகளம், ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல வகையான விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில், பதக்கங்களை குவிக்கும் வீரர்களுக்கு, பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 100 வீரர்களுக்கு பணி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதை செயல்படுத்த, மாவட்ட வாரியாக, தகுதியான விளையாட்டு வீரர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. விளையாட்டு வீரர்களின் கல்வித் தகுதி, சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்ற பதக்கத்திற்கு தகுந்தபடி, அரசு துறைகளில் விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

