இது உங்கள் இடம்: நெத்தியடி கொடுத்த ஹிமாச்சல் காங்.,
இது உங்கள் இடம்: நெத்தியடி கொடுத்த ஹிமாச்சல் காங்.,
ADDED : மார் 09, 2024 12:42 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், மக்களை மட்டுமல்ல; தங்கள் கட்சிப் பிரதிநிதிகளையும் மூளையில்லாதவர்களாகவே நடத்துகின்றன.
அந்த நினைப்புக்கு மரண அடி கொடுத்து இருக்கிறார்கள் ஹிமாச்சல் பிரதேச காங்., கட்சியினர்.
அங்கு, சுக்விந்தர் சிங் சுகு தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்த போதும், பா.ஜ., வென்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, வெற்றிகரமாக தோல்வியை தழுவினார்.
காரணம், காங்கிரஸைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களும், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறி ஓட்டளித்ததால், பா.ஜ.,வின் ஹர்ஷ் மகாஜன், சுலபமாக வெற்றிக்கனியை பறித்து விட்டார்.
தொடர்ந்து, கட்சி மாறி ஓட்டளித்த ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்; தலைவலி போய் திருகு வலி வந்தது!
கட்சிமாறி ஓட்டளித்த ஆறு எம்.எல்.ஏ.,க் களை தகுதி நீக்கம் செய்யப்போக, தற்போது, ஹிமாச்சல் பிரதேச காங்கிரஸ் கட்சி ஆட்சியே ஆட்டங்காண துவங்கிஉள்ளது.
கட்சிமாறி ஓட்டளித்த ஆறு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான ராஜிந்தர் ரானா கூறும் போது, 'நாங்கள் எங்கள் மனசாட்சியின் படி ஓட்டளித்தோம். ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்கள் ஒருவரும் இல்லையா? ஏன் வெளிமாநிலத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்?
'எங்கள் மன உணர்வுகளை முதல்வரும், கட்சி தலைமையும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் கட்சிமாறி ஓட்டளித்து, எங்கள் மன உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ள வைத்தோம்' என்கிறார்.
இது ஹிமாச்சல பிரதேசத்தில் மட்டும் நிகழும் நிகழ்வல்ல; பா.ஜ., உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ராஜ்யசபா தேர்தலின் போது, அந்த மாநிலத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவதை வழக்கமாக்கி வைத்துள்ளன.
உதாரணமாக, தி.மு.க.,வின் ஜெகத்ரட்சகனை எடுத்துக் கொள்வோம்... இவர் வசிப்பது சென்னை அடையாறு பகுதியில்; லோக்சபாவுக்கு போட்டியிடுவது அரக்கோணம் தொகுதியில் இருந்து!
அரக்கோணம் தொகுதியில் ஒரு பிரச்னை என்றால், அந்த பிரச்னையை பற்றி தொகுதி எம்.பி.,யிடம் எடுத்து சொல்லவே 500 ரூபாய் செலவழித்து, சென்னைக்கு வர வேண்டும்.
அதேபோல, துரைமுருகன்! அன்னார் வசிப்பது, சென்னை கோட்டூர்புரத்தில்; ஆனால், சட்டசபைக்கு போட்டியிடுவது காட்பாடி தொகுதியில் இருந்து!
தமிழக வாக்காள பெருமக்களே...
இன்னும் இரண்டு மாதங்களில் உங்கள் பொன்னான வாக்குகளை, ஈ.வி.எம்., இயந்திரத்தில் அழுத்தி, உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இருக்கிறீர்கள்.
அந்த பிரதிநிதி உங்கள் தொகுதியில் வசிப்பவரா என்பதை மட்டும் ஆராய்ந்து, சூதனமாக நடந்து கொள்ளுங்கள். நாடு முக்கியம்!

