இது உங்கள் இடம்: காங்., தனித்து போட்டியிட வேண்டும்!
இது உங்கள் இடம்: காங்., தனித்து போட்டியிட வேண்டும்!
ADDED : பிப் 12, 2024 05:29 AM

ஆனால், 1970களில் இருந்தே பெரும்பாலும் கூட்டணி அமைத்து தான் காங்., போட்டியிட்டுள்ளது. இதனால், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை சிறிது சிறிதாக மாநில கட்சிகளிடம் இழந்து வந்தது.
உதாரணமாக, 1970களுக்கு முன்பு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தான் இருந்தது. பின், இரண்டு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்று துவங்கியது முதல், தன் ஓட்டு வங்கியை இழக்க ஆரம்பித்தது.
இதுபோன்று பல மாநிலங்களில் சறுக்கி காங்., தற்போது, கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே தனித்து ஆட்சியில் உள்ளது.
'இண்டியா' கூட்டணி கட்சிகள் கூட, ஒருமித்த கருத்துடன் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுத்து, மல்லிகார்ஜுன கார்கேவை தான் அறிவித்துள்ளன. பீஹாரில் நிதீஷ் குமார், கழன்று ஓடி விட்டார்; மேற்கு வங்கத்தில், காங்., கட்சிக்கு சீட்கள் ஒதுக்க முடியாது என, மம்தா கூறிவிட்டார்.
பஞ்சாபிலும், ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி என, அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணி இப்போதே சிதறி விட்டது என்பதற்கு இவை உதாரணம்.
இதனால், நிஜமான காங்., தொண்டர்கள் பலரும், 'ஏன் காங்கிரஸ் கட்சி, லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் தனித்துப் போட்டியிடக் கூடாது' என்று கேட்கின்றனர்.
இன்றைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிலைப் படுத்தாமல், நாடு முழுதும் தனித்து போட்டியிட்டு, தன் ஓட்டு வங்கியை உயர்த்த வேண்டும். 2019ல் காங்., வெற்றி பெற்ற, 52 தொகுதிகளைவிட ஒரு தொகுதி அதிகமாக கிடைத்தாலே, அது கட்சிக்கு மாபெரும் வெற்றியாக அமையும்.
பா.ஜ.,வுக்கு நிகராக, நாடு முழுதும் உள்ள ஒரே எதிர்க்கட்சி காங்., மட்டுமே. எனவே, அடுத்த ஐந்தாண்டுகள் நாடு முழுதும் கட்சியை பலப்படுத்தும் வகையில், பல்வேறு யாத்திரைகளை ராகுல் மேற்கொள்ளலாம். இதன் வாயிலாக, 2029 லோக்சபா தேர்தலில், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, துணிச்சலாக தேர்தலை சந்திக்க முடியும். இதை காங்., மேலிடம் யோசிக்குமா?

