திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்: வக்பு வாரியம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்: வக்பு வாரியம்
UPDATED : டிச 16, 2025 05:51 PM
ADDED : டிச 16, 2025 02:04 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சமரச தீர்வுக்கு தயார் என்று, உயர்நீதிமன்ற விசாரணையின்போது வக்பு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற ராம ரவிகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணிலும் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் கோவில் சார்பில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கோவில் செயல் அலுவலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையிலும், தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. இந்நிலையில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், அறநிலையத்துறை இணை கமிஷனர், தர்கா நிர்வாகம், தமிழக வக்ப் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.
இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன், இன்று (டிச.,16) 3வது நாளாக விசாரணைக்கு வந்தன. அப்போது கோவில் மற்றும் தர்கா தரப்பினர் வாதங்களை முன் வைத்தனர்.
வக்ப் வாரியம் வாதம்
வக்ப் வாரியம் தரப்பில் ஆஜரான வக்கீல் முபீன், ''தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தூண் அமைந்துள்ளது. கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்தூண் என எதுவும் குறிப்பிடப்பட வில்லை. இந்த விவகாரத்தில் சமரச தீர்வுக்கு தயார்'' என்றார். ஓய்வு பெற்ற மூத்த நீதிபதியை இதற்கென நியமிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அரசு தரப்பு வாதம்
அரசு தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், '' மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் ராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். இப்பிரச்னையில் இந்தியா பற்றி எரிகிறது. தனி நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார்,'' என தெரிவித்தார்.
தனி நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் என்ற வாதத்திற்கு ராம ரவிக்குமார் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தனர்.
மதியம் விசாரணை தொடர்ந்தது.விசாரணையை தொடர்ந்து, நீதிபதிகள், 'தற்போதைய நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மேல்முறையீட்டு மனு மீது நாளையும் (டிச.,17) விசாரணை தொடரும். மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை' எனத் தெரிவித்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
தடை கிடையாது
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,டிச.17 ல் காணொலியில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனு அடிப்படையில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இரு நீதிபதிகள் அமர்வு,' தடை விதிக்க வாய்ப்பில்லை. தனி நீதிபதியிடம் முறையிடலாம்,' என தெரிவித்தது.

