இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை; சமாளிக்கிறார் திருமா!
இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை; சமாளிக்கிறார் திருமா!
ADDED : ஆக 24, 2025 02:47 PM

தூத்துக்குடி: ''தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் விசிக இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.ஒரே நிலைப்பாடு தான்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் திருமாவளவன் கூறியதாவது: தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் விசிக இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. ஒரே நிலைப்பாடுதான். அரசாணை 152 பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதனை புதுப்பிக்க வேண்டும் என்று போராடிவரும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தனியார் மயத்தை எதிர்த்து மக்களோடு போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் விசிக.
சென்னை துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்து ஆதரவாக இருக்கிறோம். முதல்வரை சந்தித்து தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். அந்த தொழிலையே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்றுக் கருத்தை முன்வைத்தோம்.
கண்ணகி நகரில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குழந்தைகளின் உயர்கல்வி வரை செலவிற்க்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். வரலட்சுமி குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்திற்க்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும். அரசு சார்பிலும் கூடுதல் உதவி வழங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
கொடிய சட்டம்
நிருபர்: 30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கும் புதிய சட்டம் குறித்து உங்களது கருத்து?
திருமா பதில்: இந்த சட்டம் மிகவும் கொடிய சட்டம். இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு. பாஜ அரசு பாசிச அரசு என்பதற்கு இந்த சட்டமே ஒரு சாட்சி.