1,000க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் மது பயன்பாடு இல்லை: மகேந்திரன்
1,000க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் மது பயன்பாடு இல்லை: மகேந்திரன்
ADDED : ஆக 14, 2025 07:12 AM
சென்னை: ''தமிழகத்தில், தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் வாழும், 1,000க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், மது பயன்பாடு இல்லை,'' என, மது, போதை ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் வசிக்கும் கிராமங்களில், இன்றைக்கும் மது பயன்பாடு இல்லை.
அத்தகவல் கிடைத்ததும், மது, போதை ஒழிப்பு மக்கள் இயக்கத்தின் குழு, ஆக., 5, 6ம் தேதிகளில், திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில், குறிப்பிட்ட 25 ஊர்களுக்கு சென்றது. ஆராய்ந்து பார்த்ததில், அந்த ஊர்களில் மது போதை முற்றாக இல்லை.
அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து பேசினோம். அவர்கள் கூறும்போது, 'எங்கள் ஊரில், யாருக்கும் மது போதை பழக்கம் கிடையாது. வெளி தொடர்புகளால், யாருக்கேனும் மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டால், அவர்களை விட மாட்டோம். ஊருக்கு வந்து குடித்தால், ஊர் கட்டுப்பாடு போட்டு ஒதுக்கி வைத்து விடுவோம்' என்றனர்.
இந்த கிராம மக்கள் அனைவரும் தொட்டிய நாயக்க சமூகத்தின், சில்லவார் பிரிவை சேர்ந்தவர்கள். சமூக ஒழுக்கத்தை, இந்த மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
இதேபோல், தொட்டிய நாயக்க சமூகத்தினர் வாழும், 1,000க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், மது பயன்பாடு இல்லை. இதுபோல், பல்வேறு சமூகங்கள், போதை, மது பழக்க வழக்கங்களில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன.
இதையடுத்து மது, போதை ஒழிப்பில் அக்கறை கொண்ட மக்களை ஒருங்கிணைத்து, ஒரு இயக்கமாக உருவாக்க முயற்சித்து வருகிறோம். கட்சி அரசியலை கடந்து, இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு, மது, போதை இல்லாத கிராமங்களைக் கண்டறிந்து, அவற்றை 'மேன்மக்கள் ஊர்கள்' என அறிவித்து, அந்த கிராமங்களுக்கு சிறப்பு பொருளாதார திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.