சமூக நீதி போராட்டத்தின் பலன்; இன்று நாம் பார்க்கும் தமிழகம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
சமூக நீதி போராட்டத்தின் பலன்; இன்று நாம் பார்க்கும் தமிழகம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
ADDED : ஜூலை 09, 2025 12:44 PM

திருச்சி: ''சமூக நீதி போராட்டத்தின் பலன் தான் இன்று நாம் பார்க்கும் தமிழகம். ஓரணியில் தமிழகம் என மாணவர்கள் திரள வேண்டும். '' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் அரசியல் பேச இங்கு வரவில்லை. ஆனால் மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம். மாணவர்கள் ஒரு போதும் கேட்சே வழியில் சென்று விடக்கூடாது. மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம். அதுதான் உங்களுடைய நிலையான சொத்து.
இந்த லிஸ்டில் வரணும்
இந்த கல்லூரியில் படித்த, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று எங்கள் அமைச்சரவையில் சீனியர்கள்; நாளை உங்களில் சிலரும் இந்த லிஸ்டில் வரலாம். வரணும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம். இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கடந்த 75 ஆண்டுகளில் இந்த சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர்ந்துள்ளார்கள்.
எனர்ஜி
கல்லூரியில் உங்களுக்குள் ஏற்படும் நட்பு கடைசி வரை தொடர வேண்டும். காலேஜில் ஏற்படும் நட்பு ஓல்ட் ஏஜ் வரை தொடர வேண்டும். மாணவர்களுக்கு இடையேயான நட்பு சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும். பல்வேறு பணிகள் இருந்தாலும் மாணவர்களை சந்தித்தால் எனர்ஜி வந்துவிடுகிறது. சமூக நீதி போராட்டத்தின் பலன் தான் இன்று நாம் பார்க்கும் தமிழகம்.
லேப்டாப்
ஓரணியில் தமிழகம் என மாணவர்கள் திரள வேண்டும். நன்றாக படித்து உயர வேண்டும். கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எப்போதும் இளைஞர்களுக்கு தி.மு.க., அரசு துணையாக நிற்கும். இளைய சமுதாயத்தை அறிவு சமுதாயமாக மாற்ற 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்க உள்ளோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.