ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம்: கூடுதல் பொருள் கேட்கும் ஊழியர்கள்
ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம்: கூடுதல் பொருள் கேட்கும் ஊழியர்கள்
ADDED : பிப் 14, 2024 07:20 AM

சென்னை: இடம் பெயர்ந்த கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி, சர்க்கரையை அனுப்புமாறு, தமிழக அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த, 2020 அக்டோபரில், 'ஒரே நாடு; ரேஷன் கார்டு' திட்டம் அறிமுகமானது. இத்திட்டத்தின் கீழ், பிற மாநில கார்டுதாரர்கள் தமிழக ரேஷன் கடைகளிலும், தமிழக கார்டுதாரர்கள் பிற மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம். விரல் ரேகையை சரிபார்த்து பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்கள், மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக சொந்த ஊர்களை விட்டு, வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது, ரேஷன் கடைகளுக்கு கூடுதல் பொருட்கள் அனுப்பப்படாததால், அந்த கடையில் இடம்பெறாத மற்ற கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அதனால், கூடுதலாக அரிசி, சர்க்கரையை அனுப்பும்படி, அரசுக்கு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

