வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்: 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்
வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்: 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்
UPDATED : ஆக 08, 2025 05:07 AM
ADDED : ஆக 08, 2025 05:05 AM

சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும், 12ம் தேதி துவக்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலத்தில் உள்ள, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை, வரும், 12ம் தேதி, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் வாயிலாக, 34,809 ரேஷன் கடைகளை சேர்ந்த, 15.80 லட்சம் ரேஷன் கார்டுகளில் உள்ள, 70 வயதுக்கு அதிகமான, 20.40 லட்சம் முதியோர் பயன்பெறுவர்.
இதேபோல, 91,969 ரேஷன் அட்டைகளில் உள்ள, 1.27 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறுவர். இதன்வாயிலாக, 16.70 லட்சம் ரேஷன் அட்டைகளில் உள்ள, 21.70 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பயன்பெற தகுதியுள்ள, ரேஷன் அட்டைதாரர்களின் விபரம், உணவுப் பொருள் வழங்கல் துறை வாயிலாக பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மின்னணு எடைதராசு மற்றும் விற்பனை முனை கருவியுடன் வாகனங்களில் சென்று, ரேஷன் கடை விற்பனையாளர்கள் பொருட்களை வழங்குவர். இதனால், அரசுக்கு 30.1 கோடி ரூபாய் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.