டெண்டர் முறைகேடு புகார்; வேலுமணி மீது ஊழல் வழக்கு!
டெண்டர் முறைகேடு புகார்; வேலுமணி மீது ஊழல் வழக்கு!
ADDED : செப் 18, 2024 07:26 PM

சென்னை: டெண்டர்களில் முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கம் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.
கோவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.அவரது பதவிக்காலத்தில், சென்னை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீடு, கான்ட்ராக்டர்கள் தேர்வு ஆகியவற்றில் விதிமுறைகளை மீறியதாக, அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
மழைநீர் வடிகால், சாலைப்பணிகளுக்கான டெண்டர்களை முறைகேடாக முடிவு செய்ததன் மூலம், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் வேலுமணி என்பது புகார்.மழைநீர் வடிகால் அமைக்க 290 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சாலைகள் அமைப்பதற்காக 246 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றில் ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல் நடந்துள்ளதாகவும், வேலுமணி மற்றும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அதன் மூலம் 26.61 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தனர்.
முடிவில், மாஜி அமைச்சர் வேலுமணி, சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னச்சாமி, செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி மற்றும் சில அதிகாரிகள், தனி நபர்கள் மீது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

