ADDED : டிச 22, 2025 09:36 PM

சென்னை: சென்னை சங்கமம் விழாவை போல, மாநிலம் முழுதும் பாரம்பரிய கலை திருவிழா நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம், 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜன., 14ம் தேதி, இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளது. இதேபோல, தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும், மாநிலத்தின் பாரம்பரிய கலை திருவிழாவை நடத்தும்படி, கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில், 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், முதல்வர் ஸ்டாலின் சென்னை சங்கமம் விழாவை துவக்கி வைக்க உள்ளார். இதில் தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து, இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். சென்னையில் பல்வேறு கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில், 20 இடங்களில், 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை, நான்கு நாட்கள், சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதற்காக, மாநிலம் முழுதும் இருந்து 1,500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழக மக்கள் விரும்பி உண்வும் பல உணவுகளை கொண்ட அரங்குகள் அமைத்து, உணவு திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கும் அமைக்கப்பட உள்ளது.

