ADDED : மார் 21, 2024 12:49 AM

சென்னை:''கவர்னர் பதவியை விட, பா.ஜ.,வில் சாமானிய உறுப்பினர் பொறுப்பை தான் பெரிய பதவியாக கருதுகிறேன்,'' என, முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்துஉள்ளார்.
முன்னாள் கவர்னர் தமிழிசை, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், சென்னை, கமலாலயத்தில் நேற்று, மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு அண்ணாமலை, உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அண்ணாமலை பேசியதாவது:
கவர்னர் பதவியை விட்டு, சாமானிய மனிதராக வரும் காட்சி அரிதானது. தமிழிசை, பா.ஜ.,வில், 25 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். அவர், 2019ல் புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய இரு மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றினார்.
இந்த முறை, 400 எம்.பி.,க்களை தாண்டி, பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வர உள்ளது. இந்த சமயத்தில், கள பணியாற்ற வேண்டும் என்பதற்காக, அரசியலுக்கு வந்துள்ளார் தமிழிசை.
அவருக்கு, எந்த எண்ணில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டதோ, அதே எண்ணுடன் கூடிய அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், தமிழிசை பேசியதாவது:
கமலாலயத்தில் தலைவராக இருந்து, கவர்னராக சென்று, இன்று தொண்டராக வந்துள்ளேன். கஷ்டமான முடிவை, இஷ்டமாக எடுத்துள்ளேன்.
கவர்னர் பதவியை விட, பா.ஜ.,வின் சாமானிய உறுப்பினர் பொறுப்பை தான் பெரிய பதவியாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

