1,350 மெகா வாட் மின்சாரம் வாங்க 4 மாநிலங்களுடன் தமிழகம் ஒப்பந்தம்
1,350 மெகா வாட் மின்சாரம் வாங்க 4 மாநிலங்களுடன் தமிழகம் ஒப்பந்தம்
ADDED : பிப் 01, 2024 04:36 AM

சென்னை: கோடைகால மின் தேவையை சமாளிக்க, மார்ச் முதல் மே வரை, 'ஸ்வேப்பிங்' எனப்படும் பரிமாற்ற முறையில், 1,350 மெகா வாட் கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரியம் நான்கு மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் மின் தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகாவாட் என்றளவில் உள்ளது. கோடை காலத்தில் இந்த தேவை, 20,744 மெகா வாட்டாக அதிகரிக்கும் என, மத்திய மின் துறை மதிப்பீடு செய்துள்ளது.
எனவே, அதிகரிக்கஉள்ள மின் தேவையை பூர்த்தி செய்ய, வெளியில் வாங்கப்படும் மின்சாரம் போதாது. இதற்காக, குறுகிய கால மற்றும் பரிமாற்ற முறையில், மின் கொள்முதல் செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அதில் குறுகிய கால மின் கொள்முதலுக்கு பணம் வழங்க வேண்டும்.
பரிமாற்ற முறையில் வாங்கப்படும் மின்சாரத்திற்கு பணம் தர தேவையில்லை; மின்சாரத்தை திரும்ப தர வேண்டும்.
அதன்படி, மார்ச்சில் 500 மெகா வாட்; ஏப்ரலில் 600 மெகா வாட்; மே மாதம் 250 மெகா வாட் கொள்முதல் செய்ய, ராஜஸ்தான், பஞ்சாப், உ.பி., மற்றும் டில்லி மாநிலங்களின் மின் துறையுடன், தமிழக மின் வாரியம் ஒப்பந்தம் செய்து உள்ளது.
தமிழகத்தில் மே முதல் காற்றாலை சீசன் துவங்கும். அப்போது, காற்றாலைகளில் இருந்து தினமும், 2,500 மெகா வாட் மேல் கிடைக்கும்.
எனவே, பரிமாற்ற முறையில் வாங்கப்படும் மின்சாரம், ஜூன் முதல் திரும்ப தரப்படும். எந்த மாநிலத்திடம் எவ்வளவு மின்சாரம் வாங்கப்பட்டதோ, அதனுடன் கூடுதலாக, 2 சதவீதம் வழங்கப்பட வேண்டும்.

