திருத்தணி தாக்குதல் குறித்த பதிவுகளை முடக்க 'எக்ஸ்' தளத்திற்கு தமிழக போலீஸ் கடிதம்
திருத்தணி தாக்குதல் குறித்த பதிவுகளை முடக்க 'எக்ஸ்' தளத்திற்கு தமிழக போலீஸ் கடிதம்
ADDED : ஜன 02, 2026 02:44 AM

சென்னை: 'ரயில் பயணத்தின்போது கத்தியை வைத்து, ஒருவரை தாக்குவது போன்ற வீடியோக்களை பரப்புவது, இளைய தலைமுறையினரை வன்முறையில் ஈடுபட வழிவகுக்கும்.
'குற்றங்கள் நிகழாமல் தடுக்க, அதுபோன்ற இணையதள முகவரிகளை முடக்க வேண்டும்' என, 'எக்ஸ்' நிறுவனத்திற்கு, தமிழக காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு தலைமையக டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறப் பட்டிருப்பதாவது:
ரயில் பயணத்தின்போது கத்தியை ஏந்தி, பொது மக்களில் ஒருவரை தாக்கும் வீடியோவை, சிலர் தங்கள் 'எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. பின், ஆன்லைனில் பரப்பப்பட்டது. இதுபோன்ற வீடியோக்களை பரப்புவது, இளைய தலைமுறையினரை வன்முறையில் ஈடுபட வழிவகுக்கும். இது, அமைதி, பொது ஒழுங்கு, சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.
திருத்தணியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டு, விசாரணை நடக்கிறது.
தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, இந்த இணையதள முகவரி, சட்ட விரோத செயலை செய்ய பயன்படுத்தப்படுகிறது. எனவே, மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க, இந்த எக்ஸ் முகவரிகளை முடக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு கடமை இருக்கு
அரசின் அக்கறையின்மை மற்றும் நிர்வாக சீர்குலைவை அம்பலப்படுத்துவது, எதிர்க்கட்சியின் அடிப்படை கடமை. இந்த தோல்விகளை முன்னிலைப்படுத்துவது, தி.மு.க., அரசுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினால், அதற்கான தீர்வு, 'எக்ஸ்' நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பது அல்ல. எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்கு பதில், முதலில் தங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கு வேலை செய்ய, தி.மு.க., அரசு முயற்சிக்கலாம். அண்ணாமலை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்

