'ஆட்டோ மொபைல் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது' மதுரை டி.வி.எஸ்., நிகழ்ச்சியில் மோடி பாராட்டு
'ஆட்டோ மொபைல் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது' மதுரை டி.வி.எஸ்., நிகழ்ச்சியில் மோடி பாராட்டு
ADDED : பிப் 27, 2024 11:46 PM

மதுரை:''ஆட்டோ மொபைல் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. அது தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்துள்ளது,'' என, சிறு, குறு, நடுத்தர வாகன தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
மதுரையில் நடந்த மாநாட்டில் மோடி பேசியதாவது:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7 சதவீதம் ஆட்டோ மொபைல் துறையில் இருந்து வருகிறது. இது நாட்டின் சுயாட்சியின் முக்கிய அங்கமாக உள்ளது. இத்துறையில் தமிழகம் மிக சிறப்பாக செயல்படுகிறது. தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்துள்ளது.
ஆட்டோ மொபைல் துறையில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு அபரிமிதமானது.
அதனால் தான், 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி இரு சக்கர வாகனங்கள், 10 லட்சம் வணிக வாகனங்கள் மற்றும் 8.5 லட்சம் மூன்று- சக்கர வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு பயணியர் வாகனத்திலும் 3,000 முதல் 4,000 வரையிலான வெவ்வேறு வாகன உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் உள்ள பல கார்கள், இந்திய தொழில் முனைவோர்களால் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களை பயன்படுத்துகின்றன.
தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா, விஸ்வகர்மா கடன் உத்தரவாத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பல லட்சம் தொழில் முனைவோர்கள் இதில் பலனடைந்து வருகின்றனர். எதிர்காலத்தை வடிவமைப்பதில் திறன் மேம்பாட்டின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும்.
அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் மத்திய அரசு அதற்கென புதிய அமைச்சகத்தை உருவாக்கியது.
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப தொழில் முனைவோர் தங்கள் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
மேலும், மத்திய அரசு பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் கூடுதல் வருவாயை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது.
அதன் வாயிலாக, ஒரு கோடி வீடுகள் பயன்பெறும். மேலும், அந்த வீடுகள் வாகனங்களுக்கான இலவச சார்ஜிங் மையமாகவும் இருக்கும்.
உற்பத்தியுடன், ஹைட்ரஜன் வாகனங்களை ஊக்குவிக்கும் ஆட்டோ மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான, 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எல்.ஐ., திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

