வணிக உரிம நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனை குழு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
வணிக உரிம நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனை குழு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADDED : ஜூலை 31, 2025 01:13 AM

சென்னை:கிராமப்புற ஊராட்சிகளில், வணிகம் அல்லது தொழில் உரிம சட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு தொழிலுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதற்கு, வணிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், மாற்று வழிக்கு, அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
முறையான விதிகள் இல்லாததால், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளும் தீர்மானத்தின் அடிப்படையில், அதிகளவில் கட்டணங்கள் வசூலித்து வந்தன. இக்குறைகளை நீக்கும் வகையில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வர்த்தக உரிமம் என்ற பெயர், வணிக உரிமம் என எளிமைப்படுத்தப்பட்டு, அரசிதழிலும் வெளியாகியுள்ளது.
வணிகர் சங்கங்கள் சார்பாக, உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த மனு அளித்தனர். இந்த மனுவில் உள்ள விபரங்களை ஆய்வு செய்ய, துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை குழு அமைக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

