ADDED : நவ 14, 2024 04:17 AM

திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜ் கவுதமன், 74. கடந்த, 1950 ஆகஸ்ட் 25ல் பிறந்தவர். இயற்பெயர் புஷ்பராஜ். புதுச்சேரி அரசு கலைக் கல்லுாரிகளில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார். இவரது மனைவி பரிமளமும் தமிழ்த்துறை பேராசிரியர்.
இருவரும் புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பணியாற்றினர். இவர்களது ஒரே மகள் டாக்டர் நிவேதா லண்டனில் வசிக்கிறார்.
ராஜ் கவுதமன் தமிழ் பண்பாட்டு ஆய்வாளராகவும், தலித் சிந்தனைகளின் படைப்பாளராகவும் திகழ்ந்தார்.
'கலித்தொகை பரிபாடல்ஒரு விளிம்பு நிலை நோக்கு, அயோத்திதாசர் ஆய்வுகள், தலித் பார்வையில் தமிழ் பண்பாடு' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நுால்களை எழுதியுள்ளார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை உள்ளிட்ட புதினங்களையும் படைத்துள்ளார்.
கடந்த, 2016ல் விளக்கு விருது, 2018ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது, 2022ல் வானம் இலக்கிய விருது, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விருது உள்பட, பல விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த, 2011ல் புதுச்சேரியில் பணி ஓய்வு பெற்ற பிறகு, திருநெல்வேலி தியாகராஜநகரில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு காலமானார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலில் எம்.எல்.ஏ., அப்துல் வஹாப், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இவரின் இறுதிச் சடங்குகள் திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லுாரி அருகே சால்வேஷன் ஆர்மி கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில், இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

