ADDED : ஜன 10, 2024 03:09 AM

கி.முத்துகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் படித்த செய்தி இது. தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி ஒன்றில், 'திருவாரூர் கமலாலயம் குளம், கருணாநிதி விளையாடிய நெடிய வரலாற்று சிறப்புமிக்க இடம். அங்கு செல்லும் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்' என தெரிவித்துள்ளார்.
இதை கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறது... அந்த குளம் புகழ் பெற்றதே, ஏதோ முன்னாள் முதல்வர் கருணாநிதி, அதனுள் குதித்து விளையாடியதால் தான் என்பது போல் உள்ளது அவரது பேச்சு. ஏற்கனவே, கருணாநிதி உபயோகித்த பேனாவின் ஞாபகார்த்தமாக, கடலில், மக்களின் வரிப்பணம் 81 கோடி ரூபாயில் ஒரு நினைவு சின்னம் வைக்க திட்டம் போட்டு வருகின்றனர்.
இது போதாதென்று, சேலம் மாடர்ன் ஸ்டூடியோ நுழைவுவாயில் அருகே, அவருக்கு ஒரு சிலை வைக்கவும் திட்டமிடுகின்றனர். இப்போது, கமலாலய குளத்தில் மராமத்து பணிகள் முடிந்ததும், அங்கும் கருணாநிதிக்கு சிலை வைக்கும் எண்ணம் இவர்களுக்கு உள்ளதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. போகிற போக்கில், கமலாலய குளத்தையே 'கலைஞர் குளம்' என்று பெயர் மாற்றி விடுவரோ என்றும் பயமாக இருக்கிறது.
புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலுக்குள், 'நாதஸ்வரம், மேளம் வாசிக்க தற்சமயம் தடை விதிக்கப்பட்டுள்ளது' என்ற செய்தி, ஹிந்துக்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. பல விதங்களில் ஹிந்து கோவில்களுக்கும், அதில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்களுக்கும் தமிழக அரசு ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இதுபோன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, தன் கட்சி தலைமையின் மனம் குளிர என்னென்ன செய்யலாம் என யோசிப்பதும், பேசுவதும் சரியல்ல.
தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் இப்போதாவது விழித்து கொள்ளவில்லை என்றால், ஒவ்வொரு கோவிலுக்கு வெளியிலும் நாளை கருணாநிதிக்கு சிலை திறந்தாலும் திறப்பர்.

