விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
UPDATED : டிச 27, 2025 12:12 PM
ADDED : டிச 27, 2025 12:04 PM

திருவண்ணாமலை: ''சிலர் விவசாயி வேடம் போட்டு அரசியல் செய்வர்; விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள்,'' என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
உழவர்கள் பின்னால் தான் நாம் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் நிகழ்ச்சி உள்ளது. நிலத்தில் நீர் உடலின் வியர்வையை பாய்ச்சி பசுமையாக பூமியை உழவர்கள் மாற்றுகின்றனர். விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் சேவை செய்வதில் திராவிட மாடல் ஆட்சி முன்னோடியாக உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 3 முறை வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. விவசாயிகள் பலன் பெற்றால் தான் உண்மையான வளர்ச்சி.
தனி பட்ஜெட்
விவசாயத்துக்கு திமுக அரசு முன்னுரிமை தருகிறது. விவசாயிகளைத் தேடி தொழில்நுட்பங்கள் வர வேண்டும். அதற்காகவே இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. திராவிட மாடல் அரசின் விவசாய நலத்திட்டங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். 13 தலைப்புகளில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வேளாண் துறையில் உள்ள பிரச்னைகளை களைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண்மை உற்பத்தியை பெருக்க வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயிகளை சென்று சேர வேண்டும். தொழில் நுட்பங்களை தேடி விவசாயிகள் அலைய வேண்டாம்.
விவசாயி வேடம்
5 வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறோம். இந்த 5 பட்ஜெட்களை சேர்த்து ஒதுக்கி இருப்பது ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய். 55,750 ஏக்கர் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி வருகிறோம். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன், வேளாண்மை துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம்.
சிலர், பெயரை எல்லாம் இஷ்டத்திற்கு மாற்றுவார்கள். ஆனால் விவசாயிகளை தவிக்கவிட்டு நடுத் தெருவில் போராடவிட்டு விடுவார்கள். இன்னும் சிலர் விவசாயி வேடம் போட்டு கொண்டு, அரசியல் செய்வார்கள். ஆனால் விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ஆதரிப்பார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள்.
ஆனால் திராவிட மாடல் அரசுக்கு, விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை ஒளிபரப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி தினமலர் இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

