ADDED : டிச 30, 2025 08:43 PM

கும்மிடிப்பூண்டி: '' திமுககூட்டணியில் புகைச்சல் கிளம்பிவிட்டது. இந்த கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது, '' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.
கும்மிடிப்பூண்டியில் கவரப்பேட்டையில் பிரசாரம் செய்த இபிஎஸ் பேசியதாவது: எம்ஜிஆர் தீயசக்தி திமுக என்று குறிப்பிட்டார், அன்று முதல் இன்று வரை எவ்வளவோ அவதாரம் எடுத்து திமுகவை வீழ்த்திய கட்சி அதிமுக.புதுசு புதுசாக சிலர் வருகிறார்கள், ஏதேதோ பேசுகிறார்கள். அதிமுக தான் எதிரிகளை வீழ்த்தும் பலம் வாய்ந்த கட்சி. அடுத்தாண்டு தேர்தலில் எத்தனை அவதாரம் எடுத்தாலும் உங்களை வீழ்த்த மக்கள் முடிவெடுத்துவிட்டார்.
திமுக என்ற இஞ்சின் இல்லாத காரை, கூட்டணி என்கிற லாரி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இந்த லாரி மக்கர் பண்ணுகிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்கிறது, மேலிடப் பொறுப்பாளர் பேசுவதை வைத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.
சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்போம் என்று திருமாவளவன் சொல்கிறார். வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று கம்யூனிஸ்ட் சண்முகம் சொல்கிறார். சில அமைச்சர்கள் 95% வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்றும் சில அமைச்சர்கள் 99% வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்வது பொய் என்று நாம் சொல்லவில்லை, சண்முகம் சொல்கிறார். ஆக கூட்டணியில் புகைச்சல் கிளம்பிவிட்டது. திமுக கூட்டணி என்ற லாரி மக்கர் செய்கிறது, இந்த கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது.
100 நாள் வேலைத்திட்டம் கிராமப்புற மக்களுக்கான திட்டம். இதில் திமுகவினர் அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அதிமுக அழுத்தம் காரணமாக வேலைநாட்களை 125 ஆக உயர்த்தி உள்ளது.சம்பளம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
திமுக வாக்குறுதி கொடுத்து செய்யவில்லை. இதை மத்திய அரசு செய்துவிட்டதால் எரிச்சல் அடைந்து ஆர்ப்பாட்டம் அறிவித்து, அதில் பொய் பேசுகிறர்கள். 100 நாள் வேலைத்திட்டம் ரத்தாகிவிடும் என்கிறார்கள். இதை மக்கள் நம்பவேண்டாம், மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியிருக்கிறது. நிரந்தரமாக வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்.
சுகாதார அமைச்சர், தமிழகத்தில் கஞ்சா எதுவுமே இல்லை என்று பச்சை பொய் சொல்கிறார். முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார். மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறீர்கள், எல்லாம் தெரியும். இந்த விஞ்ஞான உலகத்தில் உங்கள் பொய் எடுபடாது.
கடன் வாங்குவதில் முதலிடம் தமிழகம் தான். இதை நாம் சொல்லவில்லை, காங்கிரஸ்காரர் ஒருவரே சொல்கிறார், கடன் அளவு உயர்ந்துவிட்டது என்கிறார். இதற்கு அவர் மீது திமுகவினர் எரிச்சல் படுகிறார்கள். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

