வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு; 9.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நிறைவு; 9.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு
ADDED : ஜன 04, 2026 09:28 PM

சென்னை: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக, நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம் நிறைவு பெற்றுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து, தகுதியான வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் சேர்க்க, டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, நேற்றும், இன்றும் (ஜன.4) மீண்டும் சிறப்பு முகாம்கள் நடந்தன.
நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். நேற்று(ஜன.3) வரை, 9.14 லட்சம் பேர் மனு அளித்துள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

