UPDATED : பிப் 28, 2024 12:21 PM
ADDED : பிப் 28, 2024 10:51 AM

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்.,28) உத்தரவிட்டது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, இரண்டாவது முறையாக, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், வழக்கறிஞர்கள் மா.கவுதமன், பரணிக்குமார் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், 'செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும்' என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

