3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது
3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது
ADDED : டிச 29, 2025 04:35 AM

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடுவித்தனர்.
இரண்டாவது நாளாக நேற்று முன்தினம், சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.
மூன்றாம் நாளாக நேற்று, சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். தங்களின் போராட்டம் இன்றும் தொடரும் என, இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

