மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை: நிதி ஆதாரங்களை ஆராய அரசு உத்தரவு
மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை: நிதி ஆதாரங்களை ஆராய அரசு உத்தரவு
ADDED : செப் 11, 2025 01:43 AM

சென்னை: மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய, நிதித்துறைக்கு அரசு உத்தர விட்டுள்ளது.
'மாநிலத்தில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தரப்பில் வாக் குறுதி அளிக்கப்பட்டது.
1.20 கோடி மகளிர் பயன்
அதன்படி, 2023 செப்டம்பர் முதல், இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது 1.20 கோடி மகளிர் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், விண்ணப்பித்த பலரும் நிராகரிக்கப்பட்டனர். இதனால், மகளிர் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிருப்தியில் உள்ள மகளிரை திருப்திப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வாயிலாக, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாக்குறுதி அளித்து உள்ளார்.
இந்நிலையில், அரசும் அதை செயல்படுத்தும் மனநிலைக்கு வந்துள்ளது. இதற்காக, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது சாத்தியமா என்பது குறித்து ஆராய, நிதித் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
செயல்படுத்த வாய்ப்பு
இது குறித்து, சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து, ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களை தவிர்த்து, மற்ற அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது.
இந்த பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, எவ்வளவு தேவைப்படும்; அதற்கான நிதி ஆதாரங்களை எப்படி உருவாக்குவது என, நிதித்துறையிடம் அரசு பல கேள்விகளை கேட்டுள்ளது.
சாதகமான அறிக்கை வந்தால், மகளிர் உரிமைத் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழக அரசு செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.