ADDED : மார் 08, 2024 01:49 AM

சென்னை:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று, காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகங்களில் மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தை துவக்கப் போவதாக அறிவித்தனர்.
வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்திற்கு பதிலாக, பொதுப்பணித்துறை பின்புறம் போராட்டம் நடத்த, போலீசார் அனுமதி அளித்தனர். அங்கு, வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று போராட்டத்தை துவக்கினர்.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தங்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; இல்லாவிட்டால் காத்திருப்பு போராட்டம் தொடரும் என, சங்கத் தலைவர் முருகையன், பொதுச்செயலர் சங்கரலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.

