வருவாய்த்துறையினர் போராட்டம் வாபஸ்; அரசு அழைத்துப் பேசியதால் முடிவு
வருவாய்த்துறையினர் போராட்டம் வாபஸ்; அரசு அழைத்துப் பேசியதால் முடிவு
ADDED : நவ 30, 2024 05:36 AM
மதுரை: வருவாய்த் துறையில் பணியிடங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு, தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
மூன்றாம் கட்டமாக 4 நாட்களாக பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர். தாலுகா, கலெக்டர் அலுவலகங்களுக்கு வரும் அலுவலர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு அலுவலக வராண்டாக்களில் பணியை புறக்கணித்து அமர்ந்திருந்தனர்.
அரசு தரப்பில் வருவாய்த்துறை அலுவலர்களை அழைத்துப் பேசியதால் நேற்று காலை முதல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதுகுறித்து மாநில தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கூறியிருப்பதாவது:
கடலோர மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 10 மாவட்டங்களில் போராட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசு அழைத்துப் பேசியது.
அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ்லக்கானி, செயலர் அமுதா ஆகியோர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், சிலவற்றை ஒருமாத அவகாசத்தில் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தனர். 38 மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர் நிலையில் காலியிடங்களை நிரப்ப ஒருமாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.
பேரிடர் மேலாண்மை துறையில் கலைக்கப்பட்ட பணியிடங்கள் மீண்டும் ஏற்படுத்தப்படும். கருணை அடிப்படையில் நியமனத்திற்கும் வழிவகை காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நடந்த சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவுஎடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.

