மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் இடமாற்ற கட்டணம் 5 சதவீதமாக குறைப்பு
மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் இடமாற்ற கட்டணம் 5 சதவீதமாக குறைப்பு
ADDED : மார் 15, 2024 09:32 PM
சென்னை,:பொதுமக்கள், தங்களின் நிலம் அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள மின் சாதனங்களை இடமாற்றம் செய்யும் போது, மதிப்பீட்டு தொகையில் வசூலிக்கப்படும், நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம், 22 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழக மின்வாரியம், கேபிள், மின்கம்பம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. பொதுமக்கள், தங்களின் வீடு அருகில் உள்ள மின் சாதனங்களை அகற்ற, மின் வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்காக ஏற்படும் மொத்த செலவும் மதிப்பிடப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வசூலிக்கப்படும்.
அந்த மதிப்பீட்டுத் தொகையில் இடம்பெற்று உள்ள, நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணத்தை குறைத்து, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரியம் விடுத்த செய்திக்குறிப்பு:
மக்கள், தங்கள் நிலம் மற்றும் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பி, மின் வழித்தடம், டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக் கோரி விண்ணப்பிக்கும் போது, மொத்த மதிப்பீட்டு தொகையில், 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
தற்போது, அனைவரும் பயன்பெறும் வகையில், நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம், 5 சதவீதமாகக் குறைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாகக் குறைவதால் மிகவும் பயனடைவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

