பெண்ணிடம் அத்துமீறல்: மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
பெண்ணிடம் அத்துமீறல்: மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
ADDED : ஜூலை 09, 2025 05:23 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பிரார்த்தனைக்காக சென்ற போது உறவு கொள்ள வற்புறுத்தியதாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ரெஜி மோனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தக்கலையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அடிக்கடி உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் தக்கலை அருகே மேக்காமண்டபம் பாண்டிவிளையில் உள்ள ஜெபக்கூடத்துக்கு அப்பெண் சென்றார்.
அங்கிருந்த போதகர் ரெஜிமோன் பூரண நலம் அளிப்பதாக கூறி அடிக்கடி அவருக்காக பிரார்த்தனை செய்தார். பின் உனது கணவர் சரி இல்லை என்றும், தன்னுடன் உறவு கொண்டால் நோயெல்லாம் குணமாகி பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். ஒரு நாள் பிரார்த்தனைக்கு சென்றபோது பெண்ணிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றார்.
இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் போதகர் ரெஜி மோனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது மேலும் சில பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் மத போதகரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

