ADDED : மார் 14, 2024 12:55 AM

சென்னை:தெற்கு ரயில்வேயில் உள்கட்டமைப்பு மேம்பாடு, ரயில்வே வேகம் அதிகரிப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, சென்னையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று சென்னை வந்தார். தொடர்ந்து, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகம் சென்று, அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு கூட்டத்தில், சென்னை ஐ.சி.எப் பொதுமேலாளர் சுப்பாராவ், தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தெற்கு ரயில்வேயில், ரயில்வே பாதுகாப்பு, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மற்றும் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டங்களின் முன்னேற்றம், ரயில் வேகத்தை மேம்படுத்தும் பணிகள், ரயில்களின் கால அட்டவணை, ரயில்வே சொத்துகளை பராமரித்தல், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.
ரயில் சிக்னல் அமைப்பு மேம்படுத்துதல் குறித்தும் ஆலோசித்தார். தெற்கு ரயில்வேயின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து, முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்நேரடியாக விபரித்தார்.

