இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில் முன்னேற்றம்: சீனா
இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில் முன்னேற்றம்: சீனா
ADDED : ஏப் 13, 2024 12:19 PM

பெய்ஜிங்: இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என சீனா கூறியுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றில், சீனா உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியம். எல்லையில் நிலவும் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: எல்லையில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும் சீனாவும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் தொடர்பில் உள்ளன. இதில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இரு நாடுகளின் நலனுக்கும், துடிப்பான மற்றும் நிலையான உறவு முக்கியம் என்பதில் சீனா உறுதி உடன் உள்ளது.
இரு தரப்பு உறவுகளில் எல்லைப் பிரச்னையை சரியான முறையில் தீர்க்கவும், அதனை சரியாக நிர்வகிக்கவும் இந்தியா எங்களுடன் இணைந்து செயல்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

