சிவகாசியில் கட்சிக்கொடிகள், சின்னம் தோரணம் தயாரிப்பு பணி தீவிரம்
சிவகாசியில் கட்சிக்கொடிகள், சின்னம் தோரணம் தயாரிப்பு பணி தீவிரம்
UPDATED : மார் 19, 2024 06:06 AM
ADDED : மார் 19, 2024 06:04 AM

சிவகாசி : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சிக் கொடிகள், சின்னங்கள், தோரணங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு மட்டுமல்லாது அச்சுத்தொழிலுக்கும் பிரசித்தி பெற்றது. லோக்சபா தேர்தல் ஏப். 19 ல் நடைபெறுகிறது இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் தாங்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கும், பிரசாரத்திற்கும் இவற்றை வாங்குவர்.
இதனால் இங்குள்ள நிறுவனங்களில் கட்சிக் கொடிகள், சின்னங்கள், தலைவர்களின் முகமூடிகள், பேட்ஜ்கள், தோரணங்கள், தொப்பிகள், கட்சி சின்னம் பொறித்த துண்டுகள், மப்ளர்கள், வேட்டி, சேலைகள் என அனைத்தும் தயாரிக்கப்படுகின்றது.
![]() |
வழக்கத்தைவிட தேர்தல் காலத்தில் கூடுதல் உற்பத்தி மேற்கொள்ளப்படும். அதன்படி தற்போது பல்வேறு கட்சிகளும் சிவகாசியில் தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால் இத்தொழில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
சிவகாசி வீர நாகம்மாள் ஆர்ட்ஸ் உரிமையாளர் காசிராஜன் கூறுகையில் ' நாங்கள் துணிகளில் மட்டுமே அச்சடித்து தருகிறோம். தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்படுத்தப்படுவதில்லை. கடந்த சட்டசபை தேர்தலுக்கு கொடுக்கப்பட்ட விலையே இந்த லோக்சபா தேர்தலுக்கும் உள்ளது.
கட்சியினர் பிரசாரத்தை துவங்கியவுடன் அதிக அளவில் ஆர்டர் கொடுப்பார்கள். மேலும் அந்தந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளரை பொருத்தும் ஆர்டர் அதிகரிக்கும். இந்தத் தேர்தலுக்கு புதிதாக 'ஸ்ட்ரா' கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை தலைவர்களை வரவேற்கும் போது கட்சியினர் கையில் வைத்துக் கொள்ளலாம் என்றார்.


