ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணி பலி: வேலைசெய்யாத அபாய சங்கிலியால் வினை
ரயிலில் இருந்து தவறிவிழுந்த கர்ப்பிணி பலி: வேலைசெய்யாத அபாய சங்கிலியால் வினை
UPDATED : மே 03, 2024 01:25 PM
ADDED : மே 03, 2024 12:12 PM

விருத்தாசலம்: வளைகாப்புக்காக சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி, வாந்தி எடுக்க படிக்கட்டு பகுதிக்கு சென்றபோது தவறி கீழே விழுந்தார். அவரது உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்தும் அது வேலை செய்யாததால், நீண்ட தூரம் சென்று ரயில் நின்றது. அதற்குள் படுகாயமடைந்த கர்ப்பிணி கஸ்தூரி, உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் மேல்நிலைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. சென்னையில் வசித்துவரும் இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அவரது உறவினர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து வந்துள்ளனர். ரயில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்தை கடந்தபோது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரயில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முற்பட்டபோது திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அந்த ரயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் அது வேலை செய்யாததால், டிக்கெட் பரிசோதகர் உதவியுடன் அருகில் இருந்த மற்றொரு பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுந்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதற்குள் ரயில், பல கிலோமீட்டர் தூரம் கடந்துவிட்டது. பிறகு கீழே விழுந்த கர்ப்பிணி கஸ்தூரியை உறவினர்கள், ரயில்வே போலீசார் தேடினர்.
நீண்ட நேர தேடலுக்கு பின்னர் படுகாயமடைந்த கஸ்தூரி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அபாய சங்கிலி வேலை செய்யாததால் சில கிலோமீட்டர் தூரம் தள்ளி ரயில் நின்றிருந்தது. அபாய சங்கிலி வேலை செய்திருந்தால் அப்போதே ரயில் நின்றிருந்து, படுகாயங்களுடன் அவரை மீட்டிருக்கலாம் என உறவினர்கள் தரப்பில் கூறுகின்றனர். வளைகாப்புக்காக சென்ற பெண், ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.
சந்தேக மரணமாக வழக்குப்பதிவு
ரயிலில் இருந்து தவறி விழுந்து கஸ்தூரி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிறது. இதனையடுத்து அவரது மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரும் விசாரணையை துவக்கி உள்ளார். வாந்தி எடுக்கும் போது கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது.

