பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு; திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு; திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ADDED : டிச 20, 2025 02:33 PM

திருநெல்வேலி: பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைப்பதற்கு, திருநெல்வேலி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தார்.
பொருநை நதி (தாமிரபரணி) ஆற்றங்கரை நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி இரட்டை மலை அருகே பொருநை அருங்காட்சியகம் ரூ.67 கோடியில், 13.2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்க, இரண்டு நாள் அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார்.
அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளார். மாலை 5:30 மணியளவில் நாகர்கோவில் சாலையில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் சி.எஸ்.ஐ , கிறிஸ்தவ அமைப்பின் தரிசன பூமி வளாகத்தை திறந்து வைக்கிறார். அங்கு அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். பிறகு, இரவு 7:30 மணிக்கு பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
இரவில் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ 72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

