ஏழை மாணவர் ஹாஸ்டல்கள் 'சமூக நீதி விடுதி'கள் என பெயர் மாற்றம்
ஏழை மாணவர் ஹாஸ்டல்கள் 'சமூக நீதி விடுதி'கள் என பெயர் மாற்றம்
ADDED : ஜூலை 08, 2025 03:20 AM

சென்னை: 'பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகள் இனி, 'சமூக நீதி விடுதி'கள் என அழைக்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சமுதாயத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் தொடர்ந்து கல்வி பயில்வதற்கு, மாநிலம் முழுதும் பல்வேறு அரசு துறைகளின் கீழ், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 2,739 விடுதிகளில், 1.79 லட்சம் மாணவ - மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
நம் எதிர்கால சமுதாயத்தை ஒரு சமத்துவ சமூகமாக உருவாக்க, ஜாதி, சமய உணர்வுகளை களைவது இன்றியமையாதது. இந்த நோக்கத்தோடு, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பல்வேறு ஜாதி, சமய பிரிவுகளின் பெயர்களின் கீழ் செயல்பட்டு வரும் மாணவ - மாணவியர் விடுதிகளின் பெயர்களை மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவ - மாணவியருக்கான பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகள் இனி, 'சமூக நீதி விடுதி'கள் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும்.
விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர, மாணவ - மாணவியருக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும்.
தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு சில விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகள், தலைவர்களின் பெயரோடு சமூக நீதி விடுதி என சேர்த்து அழைக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.
விளையாட்டு காட்டும் முதல்வர்
அண்ணாமலை ஆவேசம்
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழகம் முழுதும் உள்ள மாணவ - மாணவியர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இல்லாமல், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த விடுதிகளில் தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவ - மாணவியர் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களின் உணவு செலவாக, 142 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரியாக ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு 39 ரூபாய் மட்டுமே உணவுக்கு செலவிடப்படுகிறது.
ஆனால், ஒரு மாணவருக்கு தினமும் 50 ரூபாய் வீதம், மாதம் 1,500 ரூபாய் உணவுப்படி வழங்கப்படுவதாக கூறி வருகின்றனர். ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் 1,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்த செலவிடாமல், தி.மு.க., அரசு ஆண்டுதோறும் திருப்பி அனுப்புகிறது. தமிழகம் முழுதும், மாணவ - மாணவியர் விடுதிகள் அவல நிலையில் இருக்க, தன் விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி, ஸ்டாலின் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார். விளம்பரத்துக்காக செலவிடுவதில், 1 சதவீதம் கூட மாணவர்கள் நலனுக்காக தி.மு.க., அரசு செலவிடவில்லை. பெயர் மாற்றத்தால், மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேலிக்கூத்தான செயல்
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில், கள்ளர் சீரமைப்பு துறை என்ற, ஒரு துறையை பிரிட்டிஷ் அரசாங்கம் துவக்கியது. கருணாநிதி முதல்வராக இருந்த போது, சீர்மரபினர் விடுதிகள் என்று பெயர் மாற்றினார். அவர் வைத்த பெயரை முதல்வர் ஸ்டாலின் மாற்றியது, அவரின் அறியாமையை காட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின், 'பிரமலைக்கள்ளர்' சமுதாயத்திற்கு சீர்மரபினர் என ஜாதி சான்றிதழ் தரப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். அப்படி இருக்க, தற்போது சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என்று அறிவித்திருப்பது சரியான கேலிக்கூத்தாகும்.
- தினகரன், பொதுச்செயலர்,
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி - தினகரன் பிரிவு