பிரதமர் மோடி வருகை: கரூர் - பல்லடம் தடத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வருகை: கரூர் - பல்லடம் தடத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்
UPDATED : பிப் 26, 2024 03:07 PM
ADDED : பிப் 26, 2024 10:39 AM

ஈரோடு: கரூர் - பல்லடம் வழித் தடத்தில், நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில், நாளை (பிப்-27) நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக ஈரோடு மாவட்ட போலீசார், போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்துள்ளனர்.
இதன்படி கோவையில் இருந்து கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரைக்கு செல்லும் கன்டெய்னர், டேங்கர் லாரிகள் மற்றும் அதிக உயரமான பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் பெருந்துறை வழியாக திண்டல் ரிங்ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், முத்துகவுண்டன்பாளையம், லக்காபுரம், மொடக்குறிச்சி, விளக்கேத்தி, சிவகிரி, தாமரைபாளையம், சாலை புதுார் வழியே கரூர் செல்ல வேண்டும்.
திருச்சி, கரூர், மதுரையில் இருந்து கோவை செல்லும் கன்டெய்னர், டேங்கர் லாரிகள் மற்றும் அதிக உயரமான பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி, லக்காபுரம், முத்து கவுண்டன்பாளையம், ரிங்ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம், திண்டல் கபே, மேட்டுக்கடை, நசியனுார் வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம்.
கோவையில் இருந்து கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்லும் இலகு ரக வாகனங்கள் பெருந்துறை வழியே திண்டல் ரிங் ரோடு, ரங்கம்பாளையம், ஆணைக்கல்பாளையம், முத்து கவுண்டன் பாளையம், பரிசல் துறை 4 ரோடு, கொடுமுடி வழியே கரூர் செல்ல வேண்டும் அல்லது பெருந்துறை ஆர்.எஸ்., வெள்ளோடு, அரச்சலுார் தலவுமலை, விளக்கேத்தி, சிவகிரி, தாமரைப்பாளையம், சாலை புதுார் வழியே கரூர் செல்லலாம்.
இலகு ரக வாகனங்கள்
மதுரை, திருச்சி, கரூர், திண்டுக்கல் நகரில் இருந்து கோவைக்கு வரும் இலகு ரக வாகனங்கள் நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, தலவுமலை, அனுமன்பள்ளி, வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம்.
அல்லது நொய்யல் சோதனை சாவடி, சாலை புதுார், தாமரைபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, மொடக்குறிச்சி, லக்காபுரம், முத்துகவுண்டன்பாளையம், ரிங் ரோடு வழியே ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம், திண்டல் கபே, மேட்டுக்கடை, நசியனுார் வழியே தேசிய நெடுஞ்சாலை சென்று கோவை செல்லலாம். கரூர் - பல்லடம் வழியே கோவைக்கும், கோவையில் இருந்து பல்லடம் வழியே கரூருக்கும் 27ம் தேதி ஒரு நாள் மட்டும் கன ரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் செல்லக் கூடாது. இவ்வாறு போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மதுரை ரோடு பொலிவு
மதுரையில் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் படுத்தி எடுத்த பழங்காநத்தம் ரோடுக்கு பிரதமர் வருகையால் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மதுரை - திருநகர் இடையேயான 6 கி.மீ., ரோடு ரூ. 40 கோடியில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் அழகப்பன் நகர் ரயில்வே கேட் துவங்கி, பழங்காநத்தம் ரவுண்டானா வரை பல மாதங்களாக குண்டும், குழியுமாக கிடந்தது.
பழங்காநத்தம் பாலத்தின் கீழ் சந்திப்பு பகுதியில் பள்ளம் மேடாக இருந்ததால் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பாதசாரிகளால் ரோட்டை கடக்க முடியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காதா என பொதுமக்கள் ஏங்கினர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் மதுரை வருகையால் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. பிப். 27, மாலை மதுரை வரும் அவர் சிவகங்கை ரோட்டில் உள்ள டி.வி.எஸ்., பள்ளி வளாகத்தில் நடைபெறும் சிறு, குறுந்தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மதுரை பசுமலை தாஜ் ஓட்டலுக்கு வரும் அவர் இரவில் தங்குகிறார். மறுநாள் காலை அவர் மதுரை விமான நிலயத்தில் இருந்து ஹெலிகாப்டரில் துாத்துக்குடி செல்கிறார்.
அவரது வருகையையொட்டி பழங்காநத்தம் ரோடு புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்த ரோட்டில் இருந்த மேடு பள்ளங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. குண்டு குழி ரோட்டில் பணியாற்றி புதுப்பொலிவு பெறச் செய்து வருகின்றனர். இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

