தேர்தல் அறிவிப்பு வரும் முன் நிலுவை; அரசாணை வெளியிட தீவிரம்
தேர்தல் அறிவிப்பு வரும் முன் நிலுவை; அரசாணை வெளியிட தீவிரம்
ADDED : மார் 11, 2024 04:39 AM
சென்னை : லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் முன், நிலுவை அரசாணைகளை வெளியிடும் பணிகளில், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.
தமிழகத்தில், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., - சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., - வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்டவை, வீட்டுவசதி துறையின் கீழ் உள்ளன.
இதில், கொள்கை முடிவுகள், முக்கிய கோப்புகளுக்கு அரசின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
உறுதியளித்தார்
இந்நிலையில், கட்டுமான திட்ட அனுமதிக்கான பொது கட்டட விதிகளில், பல்வேறு திருத்தங்கள் செய்ய கோரிக்கை எழுந்தது. சமீபத்தில் நடந்த கூட்டங்களில், இத்துறைக்கான அமைச்சர் முத்துசாமி, பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்து, அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதுதொடர்பான கோப்புகள் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அனுப்பப்பட்டன. அரசாணை பிறப்பிக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கின.
வீட்டுவசதி துறை செயலர் சமயமூர்த்தி மாற்றப்பட்டு, காகர்லா உஷா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் புதிதாக வந்து உள்ளதால், அரசாணைகளுக்கான கோப்புகள் குறித்த முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நடத்தை விதிகள்
இதுகுறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக சட்டசபை, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த காலகட்டத்தில் புதிய அரசாணைகளை வழக்கமான முறையில் பிறப்பிக்க முடியாது.
தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால், தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுத்தான் அரசாணை பிறப்பிக்க முடியும்.
இந்நிலையில், நிலுவை கோப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

