6 மாவட்டங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா
6 மாவட்டங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா
ADDED : டிச 19, 2025 06:07 AM

சென்னை: கடலுார், தேனி, தென்காசி, நாமக்கல், பெரம்பலுார், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள எட்டு கிராமங்களில், நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு நிலவரி திட்டத்தை செயல்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
நத்தம் புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி, நத்தம் நிலங்களில் வசிப்போர், உரிய ஆதாரங்களை அளித்து, பட்டா பெறலாம் .
இதில், குறிப்பிட்ட சில நிர்வாக காரணங்களால் விடுபட்ட கிராமங்கள் குறித்த விபரங்கள், அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. விடுபட்ட கிராம மக்களின் கோரிக்கை அடிப்படையில், நத்தம் நிலங்களை பட்டா நிலங்களாக மாற்ற, அரசு முடிவு செய்தது.
இதன்படி தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், வருவாய் துறையினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், தனித்தனி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, நத்தம் நிலங்கள் தனியார் பெயரில் பட்டா நிலங்களாக மாற்றப்படுகின்றன.
இந்த வகையில், ஆறு மாவட்டங்களில், எட்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில் மேலுார், வேலுடையான்பட்டு, வடக்குத்து; தேனி மாவட்டத்தில் டி.கள்ளிப்பட்டி; தென்காசி மாவட்டத்தில் மேலகரம்; நாமக்கல் மாவட்டத்தில் திப்ரமகாதேவி; பெரம்பலுார் மாவட்டம் பென்னகோணம்; திருச்சி மாவட்டம் மேளசீதேவிமங்கலம் ஆகிய கிராமங்களில், நத்தம் நிலவரித் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்கள், அதில் முறையான கட்டட அனுமதி பெற்று வீடு கட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

