ADDED : பிப் 27, 2024 11:44 PM
சென்னை:வருவாய்த்துறை சார்பில், 12.27 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் 3.06 கோடி ரூபாயில் தாலுகா அலுவலகம்; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3.44 கோடி ரூபாயில், தாலுகா அலுவலகம் மற்றும் குடியிருப்பு.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில், 1.18 கோடி ரூபாயில், ஆர்.டி.ஓ., குடியிருப்புகள் கட்டப்பட்டுஉள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில், 1.44 கோடி ரூபாயில், நான்கு தாசில்தார் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இது தவிர, 2.98 கோடி ரூபாயில், 13 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள்; தென்காசி மாவட்டம், புன்னைவனத்தில், 15.26 லட்சம் ரூபாய் செலவில், கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இவற்றை, முதல்வர் நேற்று திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், அன்பரசன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
20 துணை மின் நிலையங்கள்: எரிசக்தித் துறை சார்பில், 7,514.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, 20 புதிய துணை மின் நிலையங்களை, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 67 துணை மின் நிலையங்களில், 209.01 கோடி ரூபாய் செலவில், திறன் மேம்படுத்தப்பட்ட, 69 மின் மாற்றிகளின் செயல்பாட்டை, முதல்வர் துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினத்தில், 4.95 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, காந்தி, ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, எரிசக்தித்துறை செயலர் பீலா வெங்கடேசன், மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

