நத்தம் நில பட்டா விபரங்களை இனி இணையதளத்தில் பார்க்கலாம்!
நத்தம் நில பட்டா விபரங்களை இனி இணையதளத்தில் பார்க்கலாம்!
UPDATED : மார் 06, 2024 07:56 AM
ADDED : மார் 06, 2024 01:38 AM

சென்னை:கிராம நத்தம் நிலங்களுக்கான பட்டா விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றும் பணியை, வருவாய்த் துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் நிலங்களுக்கான பட்டா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
இதன்படி, 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட பட்டா, நில வரைபட விபரங்கள், 'தமிழ் நிலம்' மென்பொருள் தொகுப்பு வாயிலாக, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள், வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக, இந்த விபரங்களை பார்க்க முடியும். அத்துடன், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கும், இதில் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், கிராம நத்தம் நிலங்களின் பட்டா விபரங்கள், தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்படாமல் இருந்தன. அந்த விபரங்களும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் என, அரசு அறிவித்தது. இதற்கான பணியை, வருவாய்த் துறை முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது தான், கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் நத்தம் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 'சர்வே' எண்கள் தனித்து இருப்பதால், இந்த விபரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தன.
அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போது நத்தம் பட்டா விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
படிப்படியாக இப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால், அடுத்த சில மாதங்களில் நத்தம் நிலங்களை வாங்கும் மக்கள், அது தொடர்பான பட்டா மாறுதல் பணிகளை, இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம்.
தற்போது, தமிழ் நிலம் தொகுப்பில், இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை அரசு துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில், பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படும்.
பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் நிலையில், மோசடிகள் கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

