ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கூடுதல் செலவு; அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு முதல்வர் தாராளம்
ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கூடுதல் செலவு; அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு முதல்வர் தாராளம்
UPDATED : ஜன 03, 2026 02:17 PM
ADDED : ஜன 03, 2026 12:40 PM

-நமது நிருபர்-
அரசு
அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதியம் (டி.ஏ.பி.எஸ்.,) என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக முதல்வர்
ஸ்டாலின் இன்று (ஜனவரி 03) அறிவித்தார். இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அதை செயல்படுத்தவில்லை. நான்கரை ஆண்டுக்கும் மேலான நிலையிலும், அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை.இது அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த கோரிக்கையை பிரதானமாக வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், ஜன.,6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர்.
இந்த விவகாரத்தால், தேர்தலில் தங்களுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று உணர்ந்த தமிழக அரசு, இப்போது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அம்சங்கள் புதிய திட்டத்தில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இன்று அறிவித்த டி.ஏ.பி.எஸ்., என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தின் அம்சங்கள் வருமாறு:
* மாநில அரசு
அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய
நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.
*
2.50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு
ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு
இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
* ஓய்வூதியதாரர்
இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்
பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
*
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும்
போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல்
பணிக்கொடை வழங்கப்படும்.
* புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்
திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப்
பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும்
குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
* பங்களிப்புடன் கூடிய
ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில்
சேர்ந்து, புதிய தமிழகம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்
செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி
ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு
முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

