சொத்துக்களின் பிரதி ஆவணங்கள் பெற விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
சொத்துக்களின் பிரதி ஆவணங்கள் பெற விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
UPDATED : பிப் 07, 2024 03:10 AM
ADDED : பிப் 06, 2024 09:51 PM

சென்னை:சொத்துக்களின் பிரதி ஆவணங்களை, யார் யார் பெற்றனர் என்ற விபரங்களை உரிமையாளர் அறிந்து கொள்வது சாத்தியமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், வீடு, மனை விற்பனை தொடர்பான பத்திரங்கள் சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவாகின்றன. இதில், பத்திரங்கள் தொடர்பான வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் தேவைபடுவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சிறப்பு வசதியை பதிவுத்துறை ஏற்படுத்தி உள்ளது. பதிவுத்துறை இணையதளத்தில், உரிய விபரங்களை அளித்து பிரதி ஆவணம் கோரலாம்.
இதற்கான கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்திய நிலையில், ஓரிரு நாட்களில் பிரதி ஆவணங்கள் அவர்களுக்கு அனுப்பப்படும். இந்நிலையில், கோவையை சேர்ந்த ஒரு நபர், மாநில தகவல் ஆணையத்தில் எழுப்பிய முறையீடு, இந்த விஷயத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், யார் வேண்டுமானாலும், பிரதி ஆவணங்களை பெறலாம் என்பது, இன்றைய சூழலில் தவறுகளுக்கு வழிவகுக்காதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இது, பதிவுத்துறையில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக வில்லங்க சான்று, பிரதி ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர்கள் தான் பெறுவர் என்று நினைக்கிறோம். ஆனால், குறிப்பிட்ட சில வழக்குகளில் உரிமையாளருக்கு தெரியாமல், வெளியாரும் இவ்வாறு பிரதி ஆவணங்களை பெற்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யார் யார் பிரதி ஆவணம் பெற்றனர் என்பதை, அந்த சொத்தின் உரிமையாளருக்கு தெரிவிப்பதற்கான வழிமுறை இல்லை.
மாநில தகவல் ஆணைய அறிவுறுத்தல் அடிப்படையில், இதில் சில புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
பதிவுத்துறையின் ஆன்லைன் சேவைக்கான இணையதளத்தில், இது தொடர்பாக சில மாற்றங்களை செய்ய வேண்டும். இத தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசித்து வருகிறோம். விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

