UPDATED : டிச 05, 2025 06:58 PM
ADDED : டிச 05, 2025 04:58 PM

சென்னை: பிரபல அரசியல் மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
எந்த தேர்தலையும் சந்திக்காத கட்சி நடிகர் விஜய்யின் தவெக. வரும் தேர்தலில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக இன்று, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னர், திமுக, மதிமுக, அதிமுகவில் நாஞ்சில் சம்பத் இருந்தார். அதன் பின்னர் எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் தொடர்பான பொது விவாத மேடைகளில் பேசி வந்தார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் சில ஆண்டுகளாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சில திரைப்படங்களிலும் நடித்தார். இளம் நடிகர் ஒருவர் படத்தில் அரசியல்வாதியாக அவர் நடித்து, 'துப்புனா துடைச்சுக்குவேன்' என்று பேசிய வசனம் பிரபலமானது.
அண்மைக்காலமாக தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை பொது வெளியில் அவர் பேசி வந்த நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
அவரது பேட்டி;
விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து தவெகவில் இன்று என்னை நான் இணைத்துக் கொணடேன். 6 ஆண்டு காலம் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் திராவிட இயக்கத்தின் சொற்பொழிவாளர் என்று சொல்லி, ஈவெரா, அண்ணாதுரை லட்சியங்களை பேசி வந்த நான், இன்றைக்கு தவெகவில் இணைத்துக் கொண்டு, நாடு முழுக்க தவெகவின் ஒரு பிரசாரகனாக பவனி வர விஜய் என்னை அனுமதித்து இருக்கிறார்.
என்னை பார்த்த நிமிடத்தில் நான் உங்களின் ரசிகன் என்று சொல்ல, நான் மெய் சிலிர்த்து போனேன். இப்படி ஒரு அங்கீகாரத்தை அவர் தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.சுப்ரீம்கோர்ட் கரூர் துயர சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட போது இணைய தளம் ஒன்றில் பேட்டியளித்த போது, இது தவெகவுக்கு கிடைத்த வெற்றி என்றேன்.
கையறு நிலையில், கைவிடப்பட்டு, கை பிசைந்து கண்ணீரோடும், கவலையோடும் இருக்கிற தவெக இனி அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிற நிலையில் உச்சநீதிமன்றம் தவெகவுக்கு ஒரு புதிய வாசலை திறந்து வைத்து இருக்கிறது என்று பேட்டியளித்தேன்.
அந்த நிமிடத்தில் இருந்து அறிவாலயத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு வசை சொற்களால் என்னை வசைமாரி பொழிந்தார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்திற்கு ஒத்துக் கொண்டு இருந்தேன். அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.
டிச 7, 8 அறிவுத்திருவிழா என்ற பெயரில் காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூல் வெளியீட்டு விழாவும், 44 சொற்பொழிவாளர்களும் கலந்து கொண்ட விழாவும் வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. ஒரு சொற்பொழிவாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாலும் முதல் இடத்தில் இருப்பவன் இந்த எளியவன் நாஞ்சில் சம்பத்.
என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள்.உதயநிதியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு என்னிடம் தேதி வாங்கினார்கள். அந்த நிகழ்வில் கடந்த 28ம் தேதி கொரட்டூரில் விழா ஒன்றில் நான் பேசினேன். அதில் கலந்துகொண்ட இயக்குநர் கரு. பழனியப்பன் என்னை நக்கல் செய்தார், நையாண்டி செய்தார்.
நான் மனதளவில் உடைந்து போனேன், ஏன் என்னை இப்படி வசை பாடுகிறார்கள். நான் அவர்களிடத்தில் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும் சைக்கிள் கூட தரமாட்டார்கள். எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடத்தில் போய் நிற்பதில்லை. ஏதோ நான்கு கூட்டங்களில் பேசி நாட்களை நகர்த்தலாம் என்று பார்த்தால் என் வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தது எனக்கு மிகுந்த வலியை தந்தது.
தொலைக்காட்சி ஒன்றின் விவாத மேடையில், விஜய் சரியான திசையில் பயணிக்கின்றார் என்று நான் உரையாற்றினேன். அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடியும், வசையும் மிரட்டலும் அதிகமாகவே வந்து கொண்டிருந்தது. எனக்கு யார் மீதும், கோபம், வருத்தம் இல்லை.
தெப்பம் ஒன்றின் திசையை தீர்மானிப்பது தண்ணீர். இன்றைக்கு எனது திசையை தவெக தலைவர் விஜய் தீர்மானித்து இருக்கிறார். நான் தவெகவில் என்னை இணைத்துக் கொண்டேன். உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகள், காயங்களில் இருந்து விடுபட்டவனாக நான் இருக்கிறேன். விஜய்யை சந்தித்த பொன்வேளையில் இருந்து புதியதாய் பிறந்ததை போல் எண்ணி நான் பூரிக்கிறேன்.
திராவிட இயக்க சித்தாந்தம் என்றால் நடிகர் விஜய் தமது கட்சியில் கொள்கை தலைவர்கள் என்று ஈவெராவை தான் அவர் முன்னிறுத்துகிறார். அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டார்.
தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள் என்ற பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறவன். என்னை இயங்கவிடாமல் முடக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்கு இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் தந்து இருக்கிறார்.
விஜய் கட்சியில் திராவிடம் இல்லை என்று யார் சொன்னார்கள்? கட்சியின் பெயரில் தமிழகம் இருக்கிறதே. தமிழகத்தில் தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒன்றுதான். திராவிட இயக்கத்தின் நீட்சியாக தான் விஜய்யை நான் பார்க்கிறேன்.
விஜய் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார் என்பது அவர் அறிவிக்கும் தேர்தல் அறிக்கையில் தெரியவரும். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்திருக்க இயக்கம் தவெக. ஒரு நாட்டின் காலை பொழுதை தீர்மானிப்பவர்கள் இளைஞர்கள். இந்த இளைஞர்களை வைத்துக் கொண்டு ஒரு அதிரடி மாற்றத்தை செய்யும் திட்டம் விஜய்யிடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
திருப்பரங்குன்றம் சம்பவத்தில் விஜய் பேசாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, மற்றொரு தரப்புக்கு எதிராகவோ விஜய் பேசாமல் இருப்பது அவரது தரப்புக்கு நல்லது. அமைதியாக இருப்பது ஒரு வகையில் நல்லது என்று நான் நினைக்கிறேன்.பாஜவுடன் நான் இணக்கமாக இல்லை, அதிகாரத்தில் உள்ள கட்சி. தேர்தல் இங்கே நடக்க போகிறது. அதனால் நான் பாஜவை விமர்சிக்கிறேன் என்று என்னிடம் விஜய் சொன்னார். திராவிட வெற்றிக் கழகத்தில் (மல்லை சத்யாவின் கட்சி) என்னை கூப்பிட்டார்கள், வரமுடியாது என்று சொல்லிவிட்டு தான் வந்தேன்.
திமுகவில் இருந்த நானாகவே வெளியேறினேன்.மதிமுகவில் இருந்தேன். பின்னர் அதிமுகவில் இருந்தேன்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இபிஎஸ் தலைமையை ஏற்கவில்லை. டிடிவியுடன் பயணித்தேன். அமமுகவை ஆரம்பித்தார், கட்சியின் பெயரில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை என்று கூறி வெளியேறினேன்.
தவெகவில் எந்த பொறுப்பும் இன்னும் எனக்கு தரப்படவில்லை. நான் பிரசாரம் செய்தே வாழ்ந்தவன். அந்த வாய்ப்பை தரவேண்டும் என்று விஜய்யிடம் கேட்டுள்ளேன். 6 வருடமாக எந்த கட்சியிலும் இல்லாத நான் இன்றைக்கு தவெகவில் இணைந்திருக்கிறேன். நான் எந்த கட்சியிலும் இருந்து மாறவில்லை.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேட்டியளித்தார்.

