ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி உறுதி
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி உறுதி
ADDED : டிச 21, 2025 12:44 AM

“ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப் படும்,” என, அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளதாக, தென்னை விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தென்னை விவசாயம் பிரதானமானது; தேங்காய் விலை வீழ்ச்சி அடையும்போது, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தென்னை விவசாயிகளை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவுப்பொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, கோவை, திருப்பூர் உட்பட எட்டு மாவட்டங்களில், சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தை, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது.
இச்சங்கத்தின் ஏர்முனை இளைஞர் அணி மாநில தலைவர் சுரேஷ் கூறுகையில், “போராட்டத்தின் எதிரொலியாக, சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நேரில் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
“அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். ரேஷனில், பாமாயில் வழங்குவது போல், 22 ரூபாய்க்கு தேங்காய் எண்ணெய் வழங்குவது இயலாது.
“ஆனால், பாமாயிலுக்கு வழங்கப்படும், 100 ரூபாய் மானிய தொகையை தேங்காய் எண்ணெய்க்கு வழங்குவதால், விலை குறையும். முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்,” என்றார்
- நமது நிருபர் -:.

